என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்து தீவிரவாதி"
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்துஅரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிற நிலையில் ‘தான் சொன்னது சரித்திர உண்மை’ என்று அவர் உறுதிபட கூறியுள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- கோட்சே குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- அவர் ஒரு வரலாற்று உண்மையை துணிச்சலாக பேசி இருக்கிறார். அதை வரவேற்று பாராட்டுகிறேன். இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல.
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நடந்த முதல் பயங்கரவாத நடவடிக்கை காந்தி படுகொலையாகும். அதைத்தான் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
கே:- கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று தற்போது கமல்ஹாசன் சொல்லி இருப்பது ஒட்டுமொத்த இந்துக்களையும் காயப்படுத்துவதாக கூறுகிறார்களே?
ப:- இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கமில்லை. கோட்சே இந்து மதத்தை சார்ந்தவர் தான் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய நிலை தற்போது எழுந்துள்ளது. கோட்சே வாழ்க, காந்தி ஒழிக என்று அண்மையில் உத்தரபிரதேசத்தில் இந்து மகாசபையை சேர்ந்த ஒரு பெண்மணி முழக்கமிட்டார். காந்தி படத்தை பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் தான் கமல்ஹாசன் போன்றவர்களை பேச வைத்துள்ளது.
நாதுராம் கோட்சே கிறிஸ்தவரோ, முஸ்லீமோ அல்ல. அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பது உலகறிந்த உண்மை. அந்த வரலாற்று உண்மையை அவர் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு இருக்கிறது. சங்பரிவார் அமைப்புகளே அவரை இந்து என்பதால்தானே தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர் கோட்சேவை இந்து என்று உரிமை கொண்டாடலாம், ஆனால் கமல்ஹாசன் அவரை இந்து என்று சொல்லக்கூடாதா?
கே:- கோட்சேவை தீவிரவாதி என்பதை விட பயங்கரவாதி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது ஏன்?
ப:- நானும் வரலாற்று உண்மையைத் தான் கூறுகிறேன். உண்மையில் காந்தியடிகளை இந்து தீவிரவாதி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் இந்து மதத்தின் மீது தீவிர பற்றுதலை கொண்டிருந்தார். ஆனால் கோட்சே இந்து தீவிர பற்றாளரான காந்தி அடிகளையே சுட்டுக் கொன்றார்.
கே: பிரதமர் மோடி நடிகர் கமல் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறாரே?
ப: அவர் வட இந்தியாவில் நடைபெறும் இறுதி கட்ட தேர்தலுக்கு கமல் எதிர்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறார். இந்துக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து நாடகம் ஆடுகிறார். ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒரு தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது என்று வேதாந்தம் பேசுகிறார். இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.
மோடி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு வான் உயர சிலை நிறுவி இருக்கிறார். அந்த பட்டேல் தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று சொன்னவர். அவர் காலத்தில்தான் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.
கோட்சேவை பட்டேல் உள்ளிட்ட இந்து தீவிரவாத சிந்தனையாளர்கள் பயங்கரவாதி என்றே கண்டித்து இருக்கிறார்கள். இவையெல்லாம் வரலாற்று உண்மைகளாகும். வரலாற்றை திரித்து ஆதாயம் தேடுவதை சங்பரிவார் கும்பல் தொழிலாக கொண்டு இருக்கிறது. ஆகவேதான் கமலை அச்சுறுத்துகிறார்கள்.
கே: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலை கடுமையாக எச்சரித்து இருக்கிறாரே?
ப: இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றுதான். தன்னுடைய பதவிக்கான பொறுப்பை உணர்ந்து அவர் பேசியதாக தெரியவில்லை. கலைஞரின் நாக்கை அடக்க வேண்டும் என்று வட இந்திய சாமியார் ஒருவர் எச்சரித்தது போல அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி இருக்கிறார். இதிலிருந்து அ.தி.மு.க.வும் சங்பரிவார் அமைப்பின் ஒன்றாக மாறி வருகிறது என்பதை அறிய முடிகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே: கமலை ஆதரிப்பதில் உங்களுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறதா?
ப: வரலாற்று உண்மையை பேசும் கமலை வரவேற்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அவரை அச்சுறுத்தி தனிமைப்படுத்துவதற்கு மதவெறி சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த இக்கட்டான நிலையில் அவருக்கு ஆதரவு கொடுப்பதை ஒரு ஜனநாயக கடமையாகவே கருதுகிறேன். வேறு எந்த அரசியல் நோக்கமும் எனக்கு இல்லை.
காந்தியடிகளை கொன்ற கோட்சேவை உயர்த்தி பிடிப்பது காந்திக்கு செய்கிற துரோகம் என்பதைவிட ஜனநாயகத்துக்கும், தேசத்துக்கும் செய்கின்ற துரோகம். இன்னும் பல 10 ஆண்டுகள் ஆனாலும் இந்த விவாதம் இன்னும் விரிவாகவும் வெளிப்படையாகவும் நடந்தே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இந்த தொகுதிகளில் அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் இந்த 4 தொகுதிகளிலும் தனது மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அந்த ஊரில் கமல்ஹாசன் பிரசாரம் செய்யும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.
அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார். கமல் தனது பேச்சின் போது ஆவேசமாக இதை குறிப்பிட்டார்.
கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.
அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கமலின் கருத்தை வரவேற்றுள்ளது. இதனால் கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒழுக்கத்தை கடைபிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் என்று கூறுவதற்கு கமல் தகுதி இல்லாதவர். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.
தேர்தல் ஆணையம் கமல் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, “மக்கள் நீதிமய்யம் முளையிலேயே கிள்ளி எரியப்பட வேண்டிய விஷ செடி. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களை கமல் இழிவுப்படுத்தி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரம் பற்றி டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “தீவிரவாதிக்கும், கொலைகாரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் கமல் பேசியுள்ளார். இது சிறுபான்மையினரை கவரும் செயலாகும் என்று தெரிவித்தார்.
பா.ஜனதா மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கூறும்போது, இந்து மக்களை இழிவுப்படுத்திய கமலின் கட்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கமல் மீது டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அஸ்வினிகுமார் உபாத்யாயா அளித்த மனுவில், கமல்ஹாசன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார்.
எனவே, அவரது கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடமும் பா.ஜனதா சட்டப்பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுக்கள் மீது எதுபோன்று நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கமலின் பிரசாரத்துக்கு தடைவிதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று கமல் தனது பிரசாரத்தை திடீரென ரத்து செய்தார். ‘இந்து தீவிரவாதி’ கருத்தால், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கமலின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் புகழ் முருகன் கூறுகையில், வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழக முதல்வர் வருகை, வைகோ பிரச்சாரம் போன்றவற்றால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.
இந்து அமைப்புகள், பா.ஜ.க. எதிர்ப்பு ஆகியவற்றால் கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நாளை மறுநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கமல் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் மனு கொடுக்க நேற்று சென்றனர். இரவு 11 மணி வரை காத்திருந்த அவர்களிடம், இன்று காலை வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.
நாளை மறுநாள் 16-ந்தேதி கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலை, பரமத்தி, நொய்யல் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். மாலையில் வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசவும் அவர் முடிவு செய்துள்ளார். இதற்கு முறையான அனுமதி கிடைக்குமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் கமல்ஹாசனை மிக கடுமையாக கேலியும், கிண்டலும செய்து நிறைய பேர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்